யாருக்காக இந்த பட்ஜெட்?

 இந்திய நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கை மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே 2021 - 22 மத்திய பட்ஜெட்டும் அமைந்துள்ளது. 

நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பது என்ற வெறித்தனமான கொள்கையின் செயல்வடிவமாக அமைந்துள்ள இந்த பட்ஜெட்டில் எல்ஐசி, பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்று சூறையாடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுத்துறை பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி நிதி திரட்டப்படும் என்றுகூறப்பட்டிருப்பது விதை நெல்லை விற்று தின்பதற்கு சமமாகும். காப்பீட்டுத் துறையில் 74 சதவீதஅந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்பதும்காப்பீட்டுத் துறையை முற்றாக அந்நியருக்கு தாரை வார்க்கும் அப்பட்டமான முயற்சியாகும். இது நாட்டின் சுயசார்பை மேலும் பலவீனப்படுத்தும்.

விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் விரோதமான சட்டங்களை நிறைவேற்றி விட்டு நாடுதழுவிய போராட்டப் பேரலைக்கு பிறகும் அதைதிரும்பப் பெற மறுக்கும் மத்திய பாஜக கூட்டணி அரசு விவசாயத் துறையை மேலும் அழிப்பதற்கான முன்மொழிவுகளையே இந்த பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளது.பட்ஜெட் உரையில் விவசாயிகளின் நலனைக் காக்க இந்த அரசு உறுதிபூண்டுள்ளது என்று வாய்ப்பந்தல் போட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால் இந்த பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு கடந்தாண்டை விட எட்டு சதவீதம் குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  வேளாண் விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கான நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக அரசு நேரடி கொள்முதலை கைவிடுவதற்கான முன்னேற்பாடாகவே இது உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதன் மூலம் எரிபொருள் மேலும் உயர்ந்துள்ளது. இது நடுத்தர மக்களை மட்டுமின்றி அனைத்துப் பகுதி மக்களையும் பெரும் இன்னலுக்கு உள்ளாக்கும்.கொரோனா பொது முடக்க காலத்தில் பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என்றகோரிக்கை வலுவாக எழுந்தது. குறிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான நிதி இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புறப் பொருளாதாரத்தில் மேலும் மோசமான பாதிப்புகளை உருவாக்கும்.  கொரோனா பாதிப்புக் காலத்தில் பொது சுகாதாரக் கட்டமைப்பிற்கான தேவை அழுத்தமாகஉணரப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் கூட தடுப்பூசிக்காகவே பெரும் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் கொரோனா நெருக்கடியையும் கார்ப்பரேட் நலனுக்காகவே பயன்படுத்திக் கொண்ட மோடி அரசு இந்த பட்ஜெட்டிலும் அந்தப் பாதையையே தொடர்ந்துள்ளது.